தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் நேற்று இரவு முடங்கின. இந்தியாவில் இரவு 9.30 மணி முதல் இவை முடங்கின. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதே வேளையில் டிவிட்டர் தளம் தொடர்ந்து செயல்பட்டது. இந்நிலையில், “வாட்ஸ் அப் பயன்பாட்டில் சிலருக்கு பிரச்சினை இருப்பதை அறிவோம். நாங்கள் எல்லாவற்றையும் சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். விரைவில் அப்டேட் செய்கிறோம்” என்று ட்விட்டரில் அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பயனாளர்கள் பலர் பதிவிட்டு அதிருப்தி தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4:47 மணியளவில், வாட்ஸ் அப் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. அதேபோல மீண்டும் செயலியை பழையபடி இயக்க வைக்க தேவையான முயற்சிகளை மெதுவாகவும், கவனமாகவும் மேற்கொண்டு வருவதாகவும் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. மேலும், பயனாளர்களின் பொறுமைக்கு நன்றியையும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.