தமிழகம்

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பு ஏற்படுத்த திட்டம்: சுற்றுலாத் துறை

51views

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உட்படபல்வேறு சிற்பங்கள் மற்றும் கலைச்சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை தொல்லியல் துறைபாதுகாத்து பராமரித்து வருகிறது. மேலும், உலக பாரம்பரிய கலைச்சின்னம் என யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த கலைச்சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

கரோனா தொற்று பரவலால்சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய மற்றும்மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

இதில், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் கலைச்சின்ன வளாகத்தில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பை செயல்படுத்துவதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பல்லவ மன்னர்கள் உட்பட பல்வேறு மன்னர்களின் வரலாறு லேசர் ஒளி, ஒலி அமைப்பு மூலம் காட்சிப்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என சுற்றுலாத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மாமல்லபுரத்தில் முதல் முறையாக லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பின் மூலம் பல்லவ மன்னர்களின் பல்வேறு வரலாற்று பின்னணிகள் பாரம்பரிய இசையுடன், காட்சிப்படுத்தப்படும்.

இதன்மூலம், நமது பாரம்பரியத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் எளிதில் அறிய முடியும். மேலும்,சுற்றுலாவும் மேம்படும். அதனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கலைச்சின்ன வளாகங்களில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!