சினிமாவிமர்சனம்

மாமனிதன் – திரை விமர்சனம்

136views
‘வணக்கம் என் பேரு ராதாகிருஷ்ணன். நான் ஆட்டோ ஓட்டுறேன். ‘
-இப்படி கதை ஆரம்பிக்குது. யாரு இந்த ராதா கிருஷ்ணன் ரொம்ப ஆர்வமா பார்க்க நாமளும் ஆரம்பிக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. பிள்ளைகள் மேல ரொம்ப பாசம். எப்படியாச்சும் சம்பாதிச்சு வாழ்க்கையில பெரிய அளவுக்கு வரணுன்னு ஆசைப்படுற சராசரி மனசுக்காரர்.
அந்த நேரத்துல அந்த ஊருல புதுசா வீட்டுமனை விற்பனை நடக்க ஆரம்பிக்குது. தன்னால் மொத்த பிளாட்டையும் வித்துத்தர முடியும்னு சொல்லி புரோக்கரா மாறுகிறார் ராதா கிருஷ்ணன். எல்லாம்
விற்பனையாகுது. ஆனால் வழக்கம் போல பணத்தை எடுத்துக்கிட்டு அந்த ரியல் எஸ்டேட் ஓனர் தலைமறைவாகி விடுகிறார். பழியை சுமந்துகொண்டு ஒரு குற்றவாளியாக ஊரை விட்டு ஓடிப்போய் விடுகிறார் ராதா கிருஷ்ணன்.
அப்புறம் அவர் குடும்பம் என்ன ஆனது. பிறகு அவர் என்ன செய்தார். நடுத்தர மனிதர்களுடைய வாழ்க்கை சூழல் எப்படி பணத்தாலும் மோசடியாலும் வஞ்சகம் சூழ்ச்சியினால் சின்னாபின்னமாகும் என்பதையெல்லாம் இரண்டுமணிநேரம் காட்சிகள் வழியாக பார்வையாளனுக்கு சொல்லும் ஒரு குடும்ப திரைப்படம் மாமனிதன்.

மூன்றாவது வரைக்கும் படித்த தன்னை போல தன் பிள்ளைகள் இருக்கக்கூடாது. நிறைய படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய சராசரி வர்க்கத்து தந்தையாக விஜய் சேதுபதி. அவருடைய மனைவியாக காயத்திரி. டீக்கடை நடத்தும் இஸ்மாயில் பாயாக குரு சோமசுந்தரம், உறுத்தாமல் வந்துபோகும் கஞ்சாகருப்பு, கணவனை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் ஒரு பெண்குழந்தையுடன் கேரளாவில் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஜுவல் மேரி இப்படி இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்த மனிதர்களை நினைவுபடுத்திகிறது.

வழக்கம் போல வசனங்கள் வழியாக தன் முத்திரையை பதிக்கிறார் இயக்குனர். “அப்பன் தோத்த ஊருல புள்ளைங்க ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்”, “தோத்துட்டா நிக்கக்கூடாது ஓடணும் “…இப்படி திரும்பும் இடமெங்கும் தன் அடையாளத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் பதித்திருக்கிறார் சீனு ராமசாமி.
ஒளிப்பதிவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் M.சுகுமார். படத்தொகுப்பில் தேனி மாவட்டத்தையும், ஆலப்புழா கேரளாவையும் கிளைமாக்சில் வரும் காசியையும் தொய்வில்லாமல் தொகுத்திருக்கும் பாங்கு ஸ்ரீகர் பிரசாத்தை கவனிக்க வைக்கிறது.
இசையில் இசைஞானியும் யுவன் சங்கர் ராஜாவும் தங்கள் பங்களிப்பை இன்னும் கூடுதலாக செய்திருக்கலாம். நினைப்பதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா….பாடல் மனதை பிசைகிறது.
இதற்க்கு முன் வந்த சீனு ராமசாமியின் எந்த படத்தையும் ஒப்பிட்டு கொண்டு இந்த படத்தை பார்ப்பதை தவிர்த்தல் நலம். ஒருமுறை பார்க்கலாம்.
மாமனிதன் – நடுத்தர குடும்பங்களின் எதார்த்த கவிதை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!