தமிழகம்

மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி தலைமை ஆசிரியை பெங்களூரில் கைது

50views

கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே ஆசிரியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் மீது குற்றம்சாட்டிய மாணவியின் பெற்றோர், உடலை வாங்க மறுத்துடன், தங்களது மகளின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்தனர்.

தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை தேடி வந்த நிலையில், அவர் பெங்களூருவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெங்களூரு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் இன்னும் சில மணிநேரங்களில் பெங்களூரில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட உள்ளார்‌.

ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து இன்று மாணவியின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

மாணவியின் இல்லத்துக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் செல்ல உள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!