மலிவு விலை பொருள் குவிப்பு தடுப்பு சட்டத்தின்கீழ் 5 சீன பொருட்களுக்கு 5 ஆண்டு தடை: மத்திய அரசு அறிவிப்பு
உள்நாட்டு தொழில்களைக் காக்கும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு 5 ஆண்டு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலுமினியம் மற்றும் ரசாயன பொருட்கள் இதில் அடங்கும். உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் காக்க மலிவுவிலை பொருட்கள் குவிப்பு தடுப்பு (ஆன்டி டம்பிங்) சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி மற்றும் சுங்கத் துறை வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.
உருளை வடிவிலான அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைட் (சாய தொழில் துறையினர் பயன் படுத்துவது), சிலிகான் சீலன்ட் (சூரிய மின்னுற்பத்தி கலன் மற்றும் அனல் மின்கலன் தயாரிப்புக்கு பயன்படுவது), ஹைட்ரோ புளோரோ கார்பன் (ஹெச்எப்சி), காம்போனென்ட் ஆர். 32 மற்றும் ஹைட்ரோபுளோரோ கார்பன் சேர்மம் (ரெபரிஜிரேட்டரில் பயன்படுத்துவது) ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்ச கத்தின் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக தீர்வு இயக்குநரகம் (டிஜிடிஆர்) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தப் பொருட்கள் இந்திய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு சீனா ஏற்றுமதி செய்வது தெரியவந்தது. இதனால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜிப்சம் உப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப் பட்டுள்ளது. இவ்விதம் இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றுக்கு அதிக வரி விதிக்கவும் பரிந் துரைக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சீன தயாரிப்புகளுக்கு பொருள்குவிப்பு தடுப்பு விதியை பயன்படுத்தும் நாடுகளில் முதலாவதாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.