மக்கள் சேவையை விட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அகங்காரமே முக்கியம் என அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சென்றிருந்த போது அந்தக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்தார். வேறு ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பிரதமருடனான கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்தது. டெல்லிக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்து மே 31ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என உத்தரவிட்டது.
இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை ஓய்வுபெற வைத்து, தன்னுடைய தலைமை ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை ஆலோசகர் பொறுப்பில் அலபன் பந்தோபாத்யாவை மம்தா நியமித்து மம்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க ஆளுநர், ஆய்வுக்கூட்டத்திற்கு முதல்நாள் தன்னிடம் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமருடனான கூட்டத்தில் சுவெந்து அதிகாரி கலந்து கொண்டால் நாங்கள் புறக்கணித்துவிடுவோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு மக்கள் பணியைவிட ஆணவம் தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் கவர்னரின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கவர்னரின் கருத்து துரதிருஷ்டவசமானது. இப்படி பேச அவருக்கு அதிகாரம் இல்லை. மம்தா பானர்ஜி, 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளாா். மாநில மக்களின் நலன் மீதான அக்கறை அடிப்படையிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. என்ன செய்வது என்று அவருக்கு தெரியும் என்று திரிணாமுல் மூத்த தலைவர் சவுகதா ராய் எம்.பி. கூறியுள்ளார்.