தமிழகம்

மதுரை, கோவை, திருச்சி உட்பட 5 வானொலி நிலையங்களை பிரச்சார் பாரதி முடக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

67views

மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை ஆகிய 5 வானொலி நிலையங்களை முடக்க கூடாது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் நிறுத்தி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையில் இருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்.29-ம் தேதி நான் கோரியபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரச்சார் பாரதி விளக்கம் அளித்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஒரு மாநிலத்துக்கு, நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் ஒன்று போதும் என பிரச்சார் பாரதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழகம் போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை, உள்ளூர் பண்பாட்டு பரவல், பகிர்தலை தடுக்கும்.

தவிர, 5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே, இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போது உள்ளபடியே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!