விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தில் இன்று தொடக்கம் இந்தியா-பாக். அணிகள் வரும் 6-ம் தேதி மோதல்

48views

மவுண்ட் மவுன்கானு: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-பாக். அணிகள் மோதும் போட்டி வரும் 6-ம் தேதி நடக்கிறது. இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதில் 2 முறை 2-வது இடத்தை (2005, 2017) பிடித்ததே சிறந்த நிலையாகும்.

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.

12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.

ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 7 ஆட்டத்தில் விளையாடும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். வருகிற 28-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. அரையிறுதி ஆட்டங்கள் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி ஏப்ரல் 3-ந் தேதியும் நடக்கிறது.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதில் 2 முறை 2-வது இடத்தை (2005, 2017) பிடித்ததே சிறந்த நிலையாகும். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 6-ந் தேதி எதிர்கொள்கிறது.

நியூசிலாந்துடன் 10-ந் தேதியும், வெஸ்ட் இண்டீசுடன் 12-ந் தேதியும், இங்கிலாந்துடன் 16-ந் தேதியும், ஆஸ்திரேலியாவுடன் 19-ந் தேதியும், வங்காளதேசத்துடன் 22-ந் தேதியும், தென் ஆப்பிரிக்காவுடன் 28-ந் தேதியும் மோதுகிறது. இந்தியா மோதும் அனைத்து ஆட்டங்களும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!