பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற புதிய செயலி அறிமுகம்: சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்
சேலம் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற, ‘சேலம் மாநகராட்சி வி – மெட்’ செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில், ‘சேலம் மாநகராட்சி வி-மெட்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியை செல்போனில் பெற கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ‘Salem Corporation V med’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதை பயன்படுத்தி மருத்துவரின் ஆலோசனை மற்றும் காணொலி மூலம் மருத்துவர் குழுவுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளும்போது மருத்துவர்கள் கணினி செயலி வாயிலாக தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர்.
தொடர்பு கொண்டவருக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
மருத்துவக் குழுவினரின் கலந்தாலோசனைக்கு பின்னர், சிகிச்சை முறைகள் தொடர்பாக காணொலி மூலம் மருத்துவர் விளக்குவார். காணொலி நிறைவடைந்தவுடன் மருத்துவ குறிப்பு தொடர்பு கொண்டவரின் மின்னஞ்சல் மற்றும் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மருத்துவர்கள் அனுப்பும் மருத்துவக் குறிப்பின் அடிப்படையில் தொடர்பு கொண்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம்.
ஆலோசனைகளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பெறலாம். தற்போது, இரு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவர். மேலும், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் இச்சேவையில் இணைக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய செயலியின் செயல்பாட்டை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், ஜோசப், ராம், உதவி ஆணையர் மருதபாவு, உதவி செயற்பொறியாளர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.