விளையாட்டு

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா

64views

நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து பாத்திமா சனாவிடம் ஆட்டமிழந்தார். மறுபுறம், சினேகா ராணா 46 பந்துகளில் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதற்குப் பிறகு, சினேகா ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஜோடியின் சதம் அணியின் எண்ணிக்கையை 244 ரன்களுக்கு கொண்டு சென்றது. மூன்றாவது ஓவரிலேயே இந்திய ஆணி தடுமாற்றத்தை சந்தித்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா ரன் கணக்கைத் திறக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

டயானா பெய்க்கிடம் ஷெபாலி வர்மா கிளீன் போல்டு ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 ரன்களுக்கு ஒரு விக்கெட்டாக இருந்தது.இதன்பிறகு மெதுவாக ஆடிய இந்தியா, முதல் 5 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இருப்பினும், பின்னர் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் பேட்டிங் செய்ய, பதினொன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்தியா 50 ரன்களை நிறைவு செய்தது.இந்திய அணியின் இன்னிங்ஸை ஸ்மிருதி மந்தனாவும், தீப்தி சர்மாவும் கையாண்டனர். ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார், ஆனால் தீப்தி ஷர்மா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் நஸ்ரா சந்து பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 96 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளாக இருந்தது.

எனினும் மந்தனாவும் 52 ரன்களைப் பெற்றிருந்த நிலையில் பெவிலியன் திரும்ப, இந்தியா 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுராலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 13 பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் எல்பிடபிள்யூவில் அவுட் ஆனார்.இந்தியாவின் இரண்டாவது விக்கெட் 96 ரன்களுக்கு வீழ்ந்தது. ஆனால் 112 ரன்களுக்குள் பாதி அணி ஆட்டமிழந்தது. ரிச்சா கோஷ் ஒரு ரன் எடுத்த நிலையில், கேப்டன் மிதாலி ராஜ் 35 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.பூஜா வஸ்த்ரகர் மற்றும் சினேகா ராணா ஜோடி இந்தியாவைச் சரிவிலிருந்து மீட்டு எடுத்தது. இருவரும் அசுர வேகத்தில் ரன் குவித்து 41 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை 170 ரன்களுக்கு கொண்டு சென்றனர். 47 ஓவர்கள் முடிவில் இந்தியா 215 ரன்கள் எடுத்தது.எனினும் 49ஆவது ஓவரின் முதல் பந்தில் பாத்திமா சனாவின் பந்து வீச்சில் பூஜா வஸ்த்ரகர், 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஜூலன் கோஸ்வாமி 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க 7 விக்கெட் இழப்புக்கு, பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக சித்ரா அமீன்,ஜவேரியா கான் களமிறங்கினர்.

ஜவேரியா கான் 11 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப்பும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஒமைமா சொஹைல் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில், சித்ரா அமீன் நிதானமாக ஆடி 30 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதா தார், அலியா ரியாஸ், பாத்திமா சனஆ குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 43 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கு பெறும் எட்டு அணிகள் இறுதிப் போட்டி வரை சுமார் 31 போட்டிகளில் விளையாடும். தொடக்கத்தில் அனைத்து அணிகளும் ஏழு சுற்றுகளில் ஒன்றையொன்று சந்திக்கும். முதல் சுற்று மார்ச் 4ம் தேதியும், 2வது சுற்று மார்ச் 7ம் தேதியும் தொடங்குகின்றன. இந்திய மகளிர் அணி மார்ச் 10ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

மூன்றாவது சுற்று மார்ச் 11 ஆம் தேதி தொடங்கும். இந்தியப் பெண்கள் அணி மார்ச் 12 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

நான்காவது சுற்றில் இந்திய அணி மார்ச் 16-ம் தேதி இங்கிலாந்தையும், ஐந்தாவது சுற்றில் மார்ச் 19-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், மார்ச் 22-ம் தேதி ஆறாவது சுற்றில் வங்கதேசத்தையும், மார்ச் 27-ம் தேதி ஏழாவது சுற்றில் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.

இதைத் தொடர்ந்து முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 31ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் தேதியும் நடைபெறும். இந்த முறைப்படி, அனைத்து அணிகளும் தங்களுக்குள் ஒரு போட்டியில் விளையாடும். முதல் நான்கு அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். போட்டியின் இந்த முறை காரணமாக, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும், மேலும் அந்தப் போட்டிகளில் நிகர ரன் விகிதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!