பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன் மூலம் லீக் தொடரில் தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.இந்த தோல்வி மூலம் மே.இ.தீவுகள் அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
12-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 45.5 ஓவரில் 131 ரன்னுக்கு சுருண்டது.
அதிகபட்சமாச கேப்டன் டெய்லர் 50 ரன் எடுத்தார். கேம்பெல்லே 20 ரன்னும், டாட்டின் 16 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் எலீசே பெர்ரி, கார்ட்னர் தலா 3 விக்கெட்டும், ஜோனாசென் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 7 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.தொடக்க வீரர் ஹீலி 3 ரன்னிலும், கேப்டன் லானிங் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அடுத்து களம் வந்த பெர்ரி 10 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் – பேத் மூனி ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. ஆஸ்திரேலியா அணி 30.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹெய்ன்ஸ் 83 ரன்னுடனும், மூனி 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்றது. இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.
இதுவரை அந்த அணி தோல்வியை சந்திக்கவில்லை. புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.