கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காந்தி சிலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பேரவை கட்டிடமான விதானசவுதா வரை குதிரை வண்டிகளில் வந்தனர்.
காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
காங்கிரஸார் ‘எரிபொருள் விலை உயர்வால் மசாலா தோசை விலை அதிகரித்துவிட்டது. இதனால் ஏழைகள் மசாலா தோசையை கண்ணால் பார்க்க மட்டுமே முடிகிறது’ எனக் கூறி மசாலா தோசையின் படங்களை விநியோகித்தனர்.
சித்தராமையா பேசும்போது, ”சர்வதேச சந்தை மதிப்பின்படி பெட்ரோலின் விலை ரூ.38 மட்டுமே. மத்திய, மாநில அரசு களின் மிகையான வரிவிதிப்பின் காரணமாகவே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.70க்கும், டீசல் ரூ.94.27க்கும் விற்கப்படு கிறது. தமிழ்நாடு அரசு வரியை குறைத்ததால் அங்கு பெட் ரோலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்துள்ளது. அது போல் கர்நாடக அரசு செய்யாமல் மக்களை சுரண்டுவது ஏன்?”என்று கேள்வி எழுப்பினார்.