சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள், டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும், விலைவாசி கடுமையாக ஏறும்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்தியச் சந்தைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம். மக்களின் சுமையை குறைக்க வேண்டியது ஆள்வோரின் பொறுப்பு. உடனடியாக மத்திய – மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக” என்று கூறியுள்ளார்.