இந்தியாசெய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது – நிர்மலா சீதாராமன்

45views

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இப்போதைக்குக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது வெளியிடப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் நிதிச் சுமையாகும். இந்நிலையில், எரிபொருள் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பது சாத்தியமில்லாதது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இல்லையெனில் இதற்கு தீர்வே கிடையாது என்றார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக ரூ.1.44 லட்சம்கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டது. இதுபோன்ற சாமர்த்தியமான நடவடிக்கைகளை தான் எடுக்க விரும்பவில்லை என்றும், அப்போது வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய சுமை பாஜக அரசின் தலையில் விழுந்துள்ளதால்தான் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த கடன் பத்திரங்களுக்கு வட்டியாக ரூ.62 ாயிரம் கோடியை அரசு அளித்துள்ளது. 2026-ம் ஆண்டு வட்டியாக ரூ.37 ஆயிரம் கோடியை வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். வட்டி செலுத்தினாலும் பத்திர மதிப்பான ரூ.1.30 லட்சம் கோடி அப்படியே நிலுவையில் உள்ளது என்றும் கூறினார். இந்த கடன் சுமை மட்டும் இல்லாதிருந்தால் உற்பத்தி வரியை நிச்சயம் குறைத்திருப்பேன் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

எண்ணெய் விலை அதிகரித்தது குறித்து மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துவது நியாயமானதே. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள்தான் கூட்டாக தீர்வு காண வேண்டும். இருப்பினும் ரிசர்வ் வங்கி கணித்தபடி சில்லரைபணவீக்கம் 2% முதல் 6 சதவீதத்துக்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வருமான வரி இணையதளத்தில் ஏற்பட்டுள்ள சிறு குறைகள் அனைத்தும் ஓரிரு நாளில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!