தமிழகம்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என்று தமிழக அரசு சொல்வதில் நியாயம் இல்லை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

51views

பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள் குறைக்கும்போது, தமிழக அரசு மட்டும் குறைக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது என அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு பெட்ரோல் மீதானவரியை லிட்டருக்கு ரூ.5, டீசல்மீதான வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதை பின்பற்றி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட 25 மாநிலங்களின் அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன. அதன்படி, தமிழகத்திலும் வரியை அரசுகுறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘2014-ல் இருந்தஅளவுக்கு பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய அரசு குறைத்தால், மாநிலங்களின் வரிதானாகவே குறைந்துவிடும்’ என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கூறியுள்ளார். இதுஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது. தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் வரிவிதிப்பு இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்துதானே, பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இத்தருணத்தில், சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமானியன் நிரம்ப படித்தவனாக இல்லாவிட்டாலும்கூட, பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் அவர்களுக்கும் தெரியும் என்ற அண்ணாவின் பொன்மொழியை முதல்வருக்கு நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!