பெங்களூருவில் புதிய வகைகரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் தொற்றுக்கு 7 பேர் ஆளாகியுள்ளதால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கரோனா கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கரோனா 3வது அலையில் புதிய வகை கரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் வெளிநாடுகளில் பரவிவரும் நிலையில், இந்தியாவில் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியமாநிலங்களிலும் இவ்வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸை காட்டிலும் 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் 7 பேருக்கு புதிய வகை ஏ.ஒய்.4.2 கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கரோனா கட்டுப்பாட்டு குழுவினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் புதிய வைரஸை கட்டுப்படுத்துவது, சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவது, கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி, திரையரங்கம், உணவகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டு, மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்துக்குபின் அமைச்சர் சுதாகர் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து புதிய வகை வைரஸ் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் சுதாகர் கூறும்போது, ”புதிய வகை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரின்மாதிரிகள் மீண்டும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பரவல் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்துஆலோசித்தேன். பிரிட்டன், ரஷ்யா வில் புதிய வகை வைரஸ்தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.
நேற்றைய நிலவரப்படி கர்நாடகாவில் புதிதாக 390 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 410 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.