கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் பெங்களூருவில் 18 வயதுக்கும் குறைவான 499 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 88 குழந்தைகள் 9 வயதுக்கும் குறைவானவர்கள். மீதமுள்ள 411 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்கு குறைவானவர்கள்”என தெரிவித்துள்ளது.
அதிலும் கடந்த 5 நாட்களில் 263குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, கரோனா தடுப்பு நிபுணர் குழு அதிகாரிகள் குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் உரிய சிகிச்சை வசதிகளை உருவாக்குவது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது, குடியிருப்புகளில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.