கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்குகிறது.
இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 597ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 12,895ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
இப்பணி கடந்த ஜன.16 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக சனிக் கிழமை 18வது தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது, “கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாவார்கள்” என தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், 9.78 லட்சம் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயது கடந்தவர்களில் 20.83 லட்சம் இணைநோய்உள்ளவர்கள் என மொத்தம் 36.26 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ்தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக சுமார் 4 லட்சம் பேருக்கு இன்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தை சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள இமேஸ் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கெனவே என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசிதான் பூஸ்டர் டோஸாக செலுத்தப்படும். மட்டுமல்லாது, கோவின் இணையதளத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதம் அல்லது 273 நாட்கள் முடிந்துள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.