புதுச்சேரி: பதவியேற்காமல் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் – நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவி ஏற்க முடியாத பரிதாப நிலை பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது “வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க வெளிநாட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் போட்டது. ஆனால் நாங்கள் மத்திய அரசுக்கு தான் கொடுப்போம் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம் என மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நிராகரித்துள்ளது.
இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற குழப்ப நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் முழுமையான பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
மேலும், ‘புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3.6 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு நிவாரணமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு 15 நாட்கள் ஆகிறது. நிவாரணம் வந்துவிடும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வெகுவாக எதிர்பார்த்தார்கள். ஆனால் இதுவரை அந்த பணம் வரவில்லை.
இதனால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஆகவே புதுச்சேரி மக்களுக்கு உடனடியாக முதலமைச்சர் அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும். புதுச்சேரியில் இதுவரை அமைச்சரவை அமைக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.
அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவி ஏற்க முடியாத பரிதாப நிலையை பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ளது வேதனையை தருகின்றது. ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள்’ என நாராயணசாமி குற்றம்சாட்டினார்.