இந்தியாசெய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்பு

57views

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

புதுவை சட்டப்பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 12 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில், புதுச்சேரி மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஆர்.செல்வம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து செல்வம் 14-ஆம் தேதி தனது வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார், சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனுதாக்கல் காலக்கெடு முடிந்தது.

எதிர்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதனால் சட்டப் பேரவைத் தலைவராக ஆர். செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து 15-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் க. லட்சுமிநாராயணன் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

முதல் நிகழ்வாக, பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், முன்மொழிந்தவர், வழிமொழிந்தவர் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விபரத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமிநாராயணன், பேரவைத் தலைவர் பதவிக்கு ஒரு உறுப்பினரே மனு செய்துள்ளதால், போட்டியின்றி ஆர்.செல்வம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பேரவைத் தலைவர் இருக்கைக்கு வரும்படி, செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்துச்சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து முதல்வர் என்.ரங்கசாமி , உறுப்பினர்கள் பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசினர். நிறைவாக பேரவைத் தலைவர் செல்வம் ஏற்புரையாற்றினார்.

இதையடுத்து சபையின் இன்றைய அலுவல்கள் அனைத்தும் நிறைவுபெறுவதாகக் கூறி, தலைவர் செல்வம் சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.

காலை 9.30மணிக்கு துவங்கிய பேரவை நடவடிக்கை 10.15 மணிக்கு முடிந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில், முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் ஒருவர் பேரவைத் தலைவராக பதவியேற்றுள்ளார். இவர், புதுச்சேரியின் 21 -ஆவது பேரவைத் தலைவர் ஆவார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!