புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிவில் தெரிய வாய்ப்பு
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா என்ற கேள்விக்கான விடை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணை முடிவில் தெரிய வாய்ப்புள்ளது.
புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 2 முறை மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. வார்டு வரையறை, இடஒதுக்கீடு குளறுபடிகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இரு முறையும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
முதல்முறை நிறுத்தி வைக்கப்பட்டபோது, அவசரமாக தேர்தலை நடத்த பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டதால் 2வது முறையாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு முடிவு செய்ய 4 மாத காலஅவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் நிறுத்தப்பட்டாலும் நடத்தை விதிகள் புதுவையில் தொடர்கிறது. நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசால் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இலவச துணி, சர்க்கரை, போனஸ் ஆகியவை குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததை தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பில் தேர்தல் நன்னடத்தை விதிகளை திரும்ப பெற நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இன்று விசாரணை முடிவில் இதுபற்றிய முடிவு தெரியவரும்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்கிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடுகள் குறித்து தமிழிசையுடன் ரங்கசாமி ஆலோசனை செய்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் புதுச்சேரிஅரசின் டெல்லி பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.