புதிய பாதை
“காலைல என் வீட்டைச் சுத்திச் சுத்தி வந்தப்பவே ‘எடுத்துக்கிட்டு இறுக்கியிருக்கணும்’! வயசுக்கு மரியாதை காட்டி ஒதுங்கிப் போனா– இங்கேயே வந்துட்டியா நீ?” — வெறி பிடித்தவளாக கத்திக் கொண்டிருந்த அம்சவேணியைச் சுற்றி சின்னதாகக் கூட்டம்.
சண்முகம் அதொன்றையும் சட்டை செய்யாமல், தன் கைலி மடிப்பிலிருந்து, மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலிக்கொடியை உயர்த்தி, ஆட்டினான் அவள் முகத்துக்கு நேரே.
தலைச்சுமையை அப்படியே மண்ணில் சரித்துவிட்டு வெறித்துப் பார்த்தாள் அவனை. “வா, வேணி. வீட்ல பேசித் தீர்த்துக்கலாம்!” — இதைக் கேட்டதும் தான் இன்னும் ரௌத்திரியானாள் அவள். “ஏற்கெனவே தீர்ந்துபோனதப் பத்தி இப்ப என்ன பேச்சு? உப்பு போட்டுத் திங்கலையா நீ?!” — அவளுடைய தடித்த வார்த்தைகள் அவனை சீண்டிவிட்டன. அவன் உச்சிமண்டைக்குக் கோபம் ஏறுவதை முகமே சொல்லியது. “ஒத்துக்கிறேன் வேணி; அசிங்கம் தான்; என்னால தான்! தப்பு தான்; சரி பண்ணனும்னு தானே தேடி வந்து நிக்கிறேன்! உனக்கும் இப்ப என்னை விட்டா யாரு இருக்கா, சொல்லு?
அவன் தன் தப்பை ஒத்துக் கொள்பவன் போல குரலைத் தழைத்துப் பேசிய விதமும், காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த தாலியும், பல்வேறு யூகங்களைக் கிளறி விட, சுற்றி நின்றவர்கள் இப்படியும் அப்படியுமாகப் பேச ஆரம்பித்தனர்.
அந்தக் கிராமத்திலிருந்து காலேஜூக்குப் போன வெகுசில பெண்களுள் வேணிதான் சூட்டிகையானவள். விடுமுறை நாட்களில் கூட தொலைக்காட்சி பெட்டி தூங்கும். ஒற்றை குண்டு பல்பு மஞ்சள் வெளிச்சம் கசிய இரவு முழுக்க லட்சிய வெறியோடு எரியும்!
“நிறைய வாசிக்கிறியேம்ம, எழுதேன்!” – விளம்பரப் பக்கத்தை அவளுக்காகக் கத்தரித்து வைத்திருந்தார், தமிழாசிரியர் ராமாமிர்தம். அவள் தலையெழுத்து மாறியது அப்போதுதான்.
அவளுக்கு எழுத்து இலகுவாக வந்தது; ஜோடனைகள் இல்லாத, யதார்த்தம் மீறாத மனிதர்களை அவள் தன் கதை மாந்தர்களாக்கி மக்களுடன் உலவ விட்ட போது – “இது என் கதை!”; “இது என் வாழ்வைத் திருப்பிப் போட்ட நிகழ்வு!”, “ஐயோ, என் மனதில் அந்த சமயத்தில் என்ன எண்ணங்கள் ஓடினவோ அதை அப்படியே எழுத்தில் வடித்து விட்டீர்களே..!” என்று ஜனம் கொண்டாடத் துவங்கியது.
ஒரு எழுத்தாளிச்சி மதிக்க மாட்டாள் என்பது அவன் வாதம்! ஒழுங்காகக் குடும்பம் பண்ண மாட்டாள்; கண்டதற்கும் கட்சி பேசி, சம உரிமை என்றெல்லாம் கூவி – கஞ்சி டிரம்முக்குள் விழுந்து எழுந்தவளைப் போல விறைப்பும் முறைப்புமாகவே இருப்பாள் என்று சண்முகம் சொல்லிச் சொல்லி மாய்ந்தான்.
“ஒரு பால்க்காரன் பெண்டாட்டிக்கு கதையும் கத்தரிக்காயும் என்னத்துக்கு?” – என்பதே அவன் வாதம்!
விபரீதமாய் ஒரு சம்பவம்: பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒன்று அனுப்பச் சொல்லி, அவள் கதையை வெளியிடத் தயாராக இருந்த பத்திரிகை கேட்க, சண்முகத்துக்குச் சாமி வந்து விட்டது..
“உன் பெண் பழுது!” – ஊரைக் கூட்டி வேணியின் தந்தையிடம் சொன்னான். ஆனாலும் கூட, அவன் பெருந்தன்மையாக அவளோடு வாழத் தயார். பதிலாக, அவள் வீடடங்கி இருக்கத் தயாரா? எழுதாமல், பட்டிமன்றம் பேசாமல், லைப்ரரியிலிருந்து கழுதைப் பொதியாட்டம், புத்தகங்களாக அடுக்கிக் கொண்டு வந்து இரா முழுக்கப் படிக்காமல், இருக்க முடியுமா? கொக்கரித்தான் ஊர்ப் பஞ்சாயத்தில்.
வேணிக்கு இத்தனை அவமானமும் பெருங்கனமாக இருந்தது. தரம் தெரியாத அவன் சொற்களின் பாரம் – அவளை பூமியோடு புதையச் செய்யுமோவென்ற பயம் – வாட்டியது. படிக்கத் துப்பு கெட்டு போய் ஊரைச் சுற்றிவிட்டு, வேறு வழியில்லாமல் பால் வியாபாரத்தில் புகுந்துவிட்ட இவன், தன் கையாலாகாத்தனத்திற்கு வடிகாலாக அவள் வாழ்க்கையை – அவள் கனவை பலி கேட்பதில் எந்த நியாயமும் புலப்படவில்லை.
அன்று சட்டென அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். “இவ்வளவு நீ பேசவும், என்னை இங்க கொண்டாந்து நிறுத்தவும் இதானே காரணம்? இந்தா.. “ கழற்றி அவன் கட்டிய தாலியை அவன் தலைக்கு மேல் வீசினாள் அவள்! திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.
அவள் போவதற்குள் செய்தி போய்விட்டது. அம்மா அரளிவிதையைக் குடித்து அம்மியிலேயே உயிர் விட்டிருந்தாள். அப்பா நடைபிணமாக ஒரு வருடம்… ஆச்சு…
தாலி காற்றிலாடியது. சண்முகத்தைப் பார்த்த வேணி, “அடைக்கலம் கொடுக்க வந்திருக்கீங்களோ? ஹ..” என்றாள் இகழ்ச்சியாக. “பெரிய மனசு தான்! ஆனா இந்த எழுத்து எனக்குக் கொடுத்தொருக்கிற உலகம் ரொம்பப் பெருசு.. உங்க வீட்டுப் புழக்கடைச் சாக்கடையா – உங்க அழுக்குகளைக் கேள்வியே இல்லாம சுமந்துகிட்டு அலைய எனக்கு இஷ்டமில்லை… நதியாட்டம் நான் என் போக்கிலேயே போறேன்.. விட்டுடு..” என்றாள் காட்டமாக.
அவன் திகைப்போடும் இயலாமையோடும் அவளை வெறித்தான்.
வேணியைப் பார்க்க வந்திருந்த ராமாமிர்தம் சார், வேணியின் பேட்டி வெளியாகியிருந்த பத்திரிகையை விரித்து அவனுக்கு நீட்டினார்..
உற்றுப் பார்த்து நாலு வரி படிக்கத் துவங்கியதுமே அவனுக்குப் புரிந்து போயிற்று.. தன்னால் விரட்டப்பட்ட வேணி வேகமெடுத்து ஓடி இன்றுசந்தேகமில்லாமல், உயரத்தில் நிற்பதை உள்வாங்கிக் கொண்டதும் – மன்ம் மிக நிராசையாக ஒரு பெருமூச்சோடு ராமாமிர்தம் சாரைப் பார்த்துவிட்டு திரும்பி நடந்தான்.
- எழுதியவர் : தீபப்ரியா ரமணன்