ஆன்மிகம்

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் ‘பங்குனி உத்திரம்’

326views
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான பங்குனியில், உத்திர நட்சத்திரமும் பெளர்ணமியும் சேரும் நாள் ‘பங்குனி உத்திரம்’ என்று கொண்டாடப்படுகிறது. நட்சத்திரத்தால் பெளர்ணமியின் பலனும் கூடுதலாக அமையும் நாள் இது.: அறுபடை வீடுகளின் மற்ற திருத்தலங்களைக் காட்டிலும் பழனி பால தண்டாயுதபாணிக்கு பங்குனி உத்திரப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிரவுஞ்ச மலையைக் குடைந்து, தாரகாசுரனை முருகப்பெருமான் வெற்றிக் கொண்டார். அதன் பலனாக முருகப்பெருமான், இந்திரனின் மகளான தெய்வானையைக் கரம்பிடித்தார். அந்நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்ளும் திருமணமாகாத கன்னிப் பெண்களும், ஆண்களும் விரைவில் துணையின் கைபிடிப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனெனில், பங்குனி உத்திர திருநாளில்தான் ஏராளமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் – பார்வதி, ராமர்-சீதாதேவி, முருகன் – வள்ளி, தெய்வானை திருமணங்கள் பங்குனி உத்திர நாளிதான் நடைபெற்றதாம். மேலும், வள்ளியின் பிறந்த தினமும் பங்குனி உத்திர நாள்தான். தேவர்களின் அரசன் இந்திரன் – இந்திராணி,தட்சனின் மகள்களான 27 நட்சத்திரங்கள் – சந்திரன் ஆகியோரின் திருமண நாளாகவும் இப்பங்குனி உத்திர நாளே கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தாவாக அருள்புரியும் ஐயப்பன் பிறவி எடுத்ததும் இந்நன்னாளில்தான். மகாலட்சுமி விரதமிருந்து நாரயணனின் இதயம் புகுந்ததும், பிரம்மன் ஈசனிடம் வரம் வாங்கி தேவி சரஸ்வதியை தன் நாவில் குடிபுகச் செய்த பேரு பெற்ற நாள் பங்குனி உத்திர நன்னாள். இன்னாளில் முறையாக விரதமிருந்து, கடவுளர்களின் திருக்கல்யாண வைபவத்தை பார்த்து வழிபடுவர்கள் எல்லா நலங்களையும் வாழ்வில் அடைவார்கள்!
பங்குனி உத்திரத்தன்று அனுஷ்டிக்கும் திருமண விரதத்தை மன வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரும் மேற்கொள்ளலாம். முறையாக விரதமிருந்து கடவுளை கைதொழுதால் தம்பதிகள் வாழ்க்கை வளமாகும்.
பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதம் அனைத்து தெய்வங்களின் அருளையும் தர வல்லது. முக்கியமாக குலதெய்வத்தின் அருளை பெற்றுத் தரும் அருமையான விரதம் இது என்பது ஐதீகம். தொடர்ச்சியாக 48 வருடங்கள் பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள் பிறப்பில்லா நிலையையும், மரணமில்லா பேறையும் அடைந்து முக்தி பெறுவார்கள் என்பது சிலிர்க்க வைக்கும் சிறப்பு.
இன்னாளில் முறையாக விரதமிருந்து, கடவுளர்களின் திருக்கல்யாண வைபவத்தை பார்த்து வழிபடுவர்கள் எல்லா நலங்களையும் வாழ்வில் அடைவார்கள்!
  • மண்ணச்ச நல்லூர் பாலசந்தர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!