செய்திகள்தொழில்நுட்பம்

பிரபல McAfee AntiVirus ஓனர் ஜான் மெக்காஃபி சிறையில் தற்கொலை – அதிர்ச்சியில் டெக் உலகம்!

91views

சாப்ட்வேர் ஜீனியஸான ஜான் மெக்காஃபி (75) சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியான மெக்காஃபி ஸ்பெயினிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த சிறிது நேரத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

McAfee என்ற AntiVirus சாப்ட்வேரை கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்காஃபி. அவரது பெயரிலே அந்த சாப்ட்வேரை வெளியிட்டார். இந்த ஆன்டிவரைஸை உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் பயன்படுத்துகின்றனர். வைரஸ்களிடமிருந்து கணிணியைப் பாதுகாக்கும் சாப்ட்வேர் தான் இது. இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபலமான டெவலப்பர். ட்விட்டரில் அவரை சுமார் 10 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். இது மட்டுமில்லாமல் டிஜிட்டல் வடிவில் இருக்கும் பணமான கிரிப்டோகரன்சி ஏரியாவிலும் கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக நிறைய பேருக்கு ஆலோசனைகள் வழங்கி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியிருக்கிறார். இதனால் இவர் கிரிப்டோகரன்சி குரு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல தனது வாழ்க்கை கதையைப் படமாக எடுப்பதற்கான உரிமைக்காகவும் பணம் பெற்றிருக்கிறார். இவ்வாறு பல்வேறு வழிகளில் லாபம் ஈட்டிய மெக்காஃபி 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வருமான வரி தாக்கல் செய்யாமல் அமெரிக்க அரசுக்கு தண்ணி காட்டி வந்திருக்கிறார்.

அவர் வேண்டுமென்றே வருமான வரி கட்டவில்லை என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசு, இந்தக் குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறையில் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று எச்சரித்தது. போலீஸ் பிடித்துவிடும் என்பதால் 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து தப்பியோடினார். ஸ்பெயினுக்கு தப்பிச் சென்ற அவர், 2020ஆம் ஆண்டு அக்டோபரில் அங்கிருந்து இஸ்தான்புல்லுக்கு விமானத்தில் செல்லவிருந்தார். அப்போது பார்சிலோனா விமான நிலையத்தில் ஸ்பெயின் போலீசால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 9 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்பெயின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இறுதி விசாரணை நடந்துமுடிந்த பின் நீதிமன்றம் அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தது. இச்சூழலில் தான் இன்று அவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!