டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கடந்த நவ.29ஆம் தேதி தொடங்கியது. இதற்கு ஒரு நாள் முன்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அன்றே பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் தவறாமல் வர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் பின்னரும் சில பாஜக எம்பிக்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் மீண்டும் நாடாளுமன்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர், எம்பிக்கள் அவர்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மாற்றங்கள் தானாக நிகழும் என எச்சரித்தார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இன்று பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடக்கவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.