இந்தியா

பிரதமர் மோடி கார் சிக்கியதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணமா? – பஞ்சாப் அரசு புதிய விளக்கம்

56views

பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக நிகழ்விடத்திற்கு வர இருந்த பிரதமர் மோடியின் பயணத்திட்டம், மோசமான வானிலை காரணமாக இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

இதனால் பிரதமர் மோடி சாலை வழியாக பெரோஸ்பூர் செல்ல நேர்ந்தது. ஆனால் வழியில் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. பிரதமர் மோடி செல்லும் வழியில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் மேம்பாலத்தில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரு சில காரணங்களால் பிரதமரின் பெரோஸ்பூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடியும் அங்கிருந்து திரும்பினார். எனவே, பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை விளக்கமளித்தது. மேலும் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு பஞ்சாப் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் மோடியின் திடீர் பயணத்திட்ட மாற்றம் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. மோசமான வானிலை மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்தினோம். பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை.

பிரதமருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பிரதமர் மோடியின் பயணம் ரத்தானதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் இன்றைய பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும், எனத் தெரிவித்தார். எனினும் இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!