உலகம்

பிரதமராக இம்ரான் கான் நீடிக்கிறாரா?: பாக்.,கில் தொடரும் அரசியல் குழப்பம்!

136views

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்கின்றன. தற்காலிக பிரதமராக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘பிரதமராக இம்ரான் கான் தொடர முடியாது’ என, பார்லிமென்ட் கூறியுள்ள நிலையில், ‘மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை, இம்ரான் கானே பிரதமர்’ என, அதிபர் அறிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் குழப்பத்தை அதிகரித்துள்ளன.நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

அதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வந்தன.கூட்டணிக் கட்சிகளுடன், இம்ரான் கானின் கட்சி எம்.பி.,க்களே போர்க் கொடி தூக்கியதால், அவர் பெரும்பான்மை பலத்தை இழந்தார். பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பாக்.,கில் பல அதிரடி அரசியல் காட்சிகள் அரங்கேறின.பார்லி.,யில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அடுத்து, பார்லி.,யை கலைத்து இம்ரான் கான் அளித்த பரிந்துரையை அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி ஏற்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்த அரசியல் குழப்பங்கள் நேற்றும் தொடர்ந்தன. பாக்., உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அஹமதுவை, தற்காலிக பிரதமராக பரிந்துரைப்பதாக, இம்ரான் கானின் கட்சி நேற்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ‘பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்’ என, கேபினெட் செயலகம் நேற்று காலை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில், ‘தற்காலிக பொறுப்பு பிரதமர் பதவியேற்கும் வரை, இம்ரான் கான் பிரதமராக தொடருவார்’ என, அதிபர் ஆரிப் அல்வி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.இந்த மாறுபட்ட செய்திகளால், இம்ரான் கான் பிரதமராக தொடர்கிறாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது மற்றும் பார்லிமென்ட் கலைக்கப்பட்டது தொடர்பாக, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

நேற்று நடந்த விசாரணையின்போது, ‘நியாயமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என, தலைமை நீதிபதி உமர் அடா பந்தியால் கூறியுள்ளார்.தீர்மானம் நிறைவேற்றம்!அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்திலேயே நேற்று முன்தினம் தங்கியிருந்தனர். அப்போது, எதிர்கட்சிகள் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்தின. இதில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 197 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்த பார்லிமென்ட் கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு சட்டப்பூர்வமானது என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!