கட்டுரை

பாவலரின் சொல்லாற்றல்…..!

133views
பாவலர் சதாவதானம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் ஈற்றடி கொடுத்து பாடச் சொன்னார்…
”கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே”
எல்லோரும் திகைத்தனர்…
அது எப்படி முடியும்…?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல் அல்லவா இருக்கிறது…
பாவலர் திகைத்தாரில்லை…
இந்து மத வேதங்களையும் இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்து விளையாடும் அவர்க்கு இந்த ஈற்றடித் தலைப்பு எம்மாத்திரம்…?
அவர்க்குப் பெரிய புராணத்தின் காட்சி ஓன்று கண்களில் ஆடியது.
ஆமாம். திண்ணப்பர் கண்ணப்பரான கதையது..
வேட குல கண்ணப்பர் ஒரு சிவ பக்தர்…
காட்டுப் பொருட்களையும் வேட்டைப் பொருட்களையும் சிவனுக்குக் காணிக்கையாய் படைப்பவர்…ஆனாலும் அனுதினமும் அயராமல் சிவ பூசை செய்பவர்…
அவரிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிவனுக்கு வந்தது…
என்ன செய்தார் தெரியுமா…?
அவர் பூசை செய்யும் நேரத்தில் தன்னுடைய கண்களில் இருந்து இரத்தக் கண்ணீரை வழிய விட்டார்…
பதறிப் போனார் திண்ணப்பர்…
ஐயையோ…! என்னுடைய சிவன் கண்களில் இரத்தமா…
எப்படித் துடைப்பேன் என்று யோசித்தார்..
ஏதேதோ செய்து பார்த்தார்…
வேடருக்கு என்ன மருத்துவம் தெரியும்…?
பக்கத்திலே கிடந்த மூலிகைகளைப் பறித்து வைத்தியம் செய்தார்…
அப்போதும் இரத்தம் நிற்கவில்லை..
ஒன்றுமே புரிய வில்லை..
திகைத்து நின்றவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது…
அப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று நினைத்தவர் தன கையில் இருந்த வேலைக் கொண்டு தன்னுடைய ஒரு கண்ணைப் பெயர்த்தார்…
அப்படியே சிவன் கண்ணில் பொருத்தினார்…
வழிந்த ரத்தம் நின்றது…
கண்ணுக்குக் கண் சரியாயிற்று…..!
மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் திண்ணப்பர் …
ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை…
சிவனுக்கு மீண்டும் ஒரு விபரீத எண்ணம்…
இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் என்ன…?
திடீரென்று அடுத்த கண்ணிலும் இரத்தத்தை வழிய விட்டார்..
இப்போது திண்ணப்பர் திணறவே இல்லை..
உடனே தன்னுடைய மற்றொரு கண்ணையும் பெயர்த்துப் பொருத்தி விட்டார்…
அகமகிழ்ந்து போனார் சிவபெருமான்…
இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட வேட பகதனையா சோதித்தோம்…?
அவனுக்கு தன்னுடைய திருக்காட்சியை வழங்கி விட வேண்டியதுதான் என்று திருக்காட்சி வழங்கினார்..
திண்ணப்பருக்கு இப்போது சிவக் காட்சி கிடைத்தது..
ஊனக்கண் போன பிறகு ஞானக் கண் கிடைத்து இதுவரை காணாத காட்சி கிடைத்தது..
“திண்ணப்பனே! …எனக்குக் கண் வழங்கிய காரணத்தால் இன்று முதல் உனக்குக் கண்ணப்பன் என்ற பெயரை வழங்குகிறேன்” என்று கூறி திருக்காட்சி வழங்கினார் சிவ பெருமான்…
பக்தனுக்கு இறைக் காட்சியை விட வேறென்ன வேண்டும்…?
இதை அப்படியே கவிதையாக்கி ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்துக் கவிதையாக்கினார் பாவலர்…
“விண் தொட்டசையும் தருமலி கானில் மிகு திண்ணனார்
பண்பட்ட செந்தமிழ் பாவாணர் போற்றும் பரமன் விழி
புண் பட்டதென்று தன் கண்ணைப் பெயர்த்துப் பொருத்தியிரு
கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே…”
இந்த இலக்கிய அழகில் கேள்வி கேட்டவர் மட்டுமா அனைவருமே அழகிய இலக்கியக் காட்சியை அல்லவா கண்டார்கள்…?
நமது கோட்டாரின் பாட்டாறு சதாவதானி செய்கு தம்பிப் பாவலர் அவர்களின் பிறந்த நாள் நேற்று…
அத்தாவுல்லா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!