பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதலில், அவனி லெகரா தனது 2வது பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளார்.டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்த அவனி (19 வயது), நேற்று 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் (ஆர்8) பங்கேற்றார். தகுதிச்சுற்றில் அவர் 1176 புள்ளிகள் குவித்து 2வது இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த ஸ்வீடன் வீராங்கனை அன்னா நார்மன் (1177புள்ளி), 3வது இடம் பிடித்த சீன வீராங்கனை குயிபிங் சாங் (1171) உட்பட 8 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
பைனலில் அவனி 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீன வீராங்கனை ஸாங் குயிபிங் (457.9) முதலிடம் பிடித்து தங்கமும், ஜெர்மனி வீராங்கனை ஹில்ட்ராப் நடாஷா 457.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளியும் வென்றனர்.நடப்பு பாரா ஒலிம்பிக்கில் அவனி தனது 2வது பதக்கத்தை முத்தமிட்டு அசத்தியுள்ளார். இதன் மூலமாக பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைையை அவனி பெற்றுள்ளார். ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திரா 2004, 2016, 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களும், தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதலில் 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.அவனி நாளை மறுநாள் நடைபெற உள்ள கலப்பு ரைபிள் புரோன் (ஆர்6) துப்பாக்கிசுடும் போட்டியில் சித்தார்தா பாபு, தீபக் ஆகியோருடன் பங்கேற்கிறார். அதிலும் பதக்கம் வென்று அவனி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.