பாஜக எம்எல்ஏவுடன் சந்திப்பு? சொலிசிட்டர் ஜெனரலை தகுதி நீக்கம் செய்ய திரிணாமுல் போர்க்கொடி
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மேற்கு வங்க பாரதிய ஜனதா எம்.எல்.ஏ சுவெந்து அதிகாரி இடையிலான சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், டெல்லிக்கு வந்த சுவெந்து அதிகாரி, நாட்டின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்திக்க அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே நாரதா மற்றும் சாரதா நிதி நிறுவன முறைகேடுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்துவரும் சுவெந்து அதிகாரி, துஷார் மேத்தாவை சந்தித்ததில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும், ஆகவே அவரை பிரதமர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த சந்திப்பு விவகாரம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுளள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுவேந்து அதிகாரி தனது வீட்டிற்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி வந்ததாகவும் ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.