இந்தியா

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் வாரணாசியில் பிரதமர் ஆலோசனை

47views

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் 3 ஆயிரம் சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.339 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது தங்கள் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம், கட்சி வளர்ச்சி குறித்து முதல்வர்கள் விளக்கமாக எடுத்துக் கூறினர். கூட்டத்திற்கு பின்னர், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முதல்வர்கள், துணை முதல்வர்கள் சென்று வழிபட்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரதமர் மோடி வாரணாசி ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திறந்து வைக்கப்பட்ட கோயில் வளாகத்தையும் அவர் பார்வையிட்டார். நேற்று அதிகாலை 1 மணியளவில் வளாகத்தைப் பார்வையிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “காசியில் நடைபெற்று வரும் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தேன். இந்த புனித நகரத்துக்கு சிறந்தஉள்கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முயற்சி. இதைச் செய்து முடிப்போம்” என்றார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘அடுத்ததாக வாரணாசி ரயில் நிலையத்தைப் பார்வையிட்டேன். இந்த நகரத்தில் சிறப்பான ரயில் இணைப்பை மேம்படுத்தவும், சுத்தமான, நவீன மற்றும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் ரயில் நிலையத்தில் வசதிகளை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!