இந்தியா

பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க முடியாது: மத்திய குழுவிடம் கேரள மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

42views

பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். இவரது தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க முடியாது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தற்போது பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கும் முக்கிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவையும், காங்கிரஸ் கட்சியையும் சமமான அச்சுறுதலாக பார்க்க முடியாது. எனவே பாஜகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்தகாங்கிரஸின் துணை இல்லாமல் தனியாக ஓர் அணியை உருவாக்கவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான காங்கிரஸின் அணுகுமுறை நேர்மையற்றது என்றும், பல பிரச்சினைகளில் சந்தர்ப்பவாதமானது என்றும் நம்புகிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியானது, அடிக்கடி மென்மையான இந்துத்துவா அணுகுமுறையை எடுத்து வருகிறது என்று அவர்கள் வாதிட்டனர்.

டெல்லி, தெலங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இந்த அணுகுமுறையை ஆதரித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் முன்னிலையில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸை தேசிய அளவில் புறக்கணிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கடந்த கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவை மாற்றவோ அல்லது விவாதத்தை மீண்டும் தொடங்கவோ தேவையில்லை என்று கட்சியின் மத்திய குழு வட்டாரங்கள் நம்புகின்றன. காங்கிரஸுடனான கட்சியின் அணுகுமுறையைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, விவசாயிகள் போராட்டம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!