இந்தியாசெய்திகள்

பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் தேவை: ஏனென்றால்?- எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

51views

பள்ளிகளைத் திறப்பதில் நாம் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கற்றல் பாதிப்பைக் குறைக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு இயங்கின.

கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் விளிம்புநிலைக் குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வி என்பது பெரும்பாலும் சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, பள்ளிகளைத் திறப்பதில் நாம் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ”பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஏனெனில் இது இளம் தலைமுறையை, குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியில்லாத விளிம்புநிலை மாணவர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.

அதேபோலப் பள்ளிகள் பாடம் கற்பிக்கும் இடமாக மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் தனித்தனித் திறமைகளோடு வளர்கிறார்கள். சக மாணவர்களுடன் ஒவ்வொருவரும் உரையாடுகிறார்கள்.

குழந்தைகளின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட நாம் முயல வேண்டும். அதுகுறித்த திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டும்” என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பகுதி அளவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஜூலை 1-ம் தேதி முதல் திறக்கும்படி கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை மாணவர்கள் வருகைக்கு ஏற்பத் தயார்படுத்தும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!