தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பயிர் கடன் தள்ளுபடி பொறுத்தவரை 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வாங்க வேண்டிய கடனை விட கடந்த அதிமுக ஆட்சியில் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ. 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 503 கோடி முறைகேடாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம்போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர் கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆறு தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி ரூ. 54.50 லட்சம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாகவும், சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2698 உறுப்பினர்களுக்கு ரூ. 4.90 கோடி மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் ரூ. 16.70 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.