பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம்..மீறினால் சஸ்பெண்ட்!: இத்தாலி அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து நாடு முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டம்..!!
இத்தாலியில் பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர். இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணியிடங்களில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலில், முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வருகின்ற 15ம் தேதி முதல் அனைத்து பணியிடங்களில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்த் பாஸ் இல்லாத தொழிலாளர்கள் ஊதியம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கமாக, அனைத்து பணியிடங்களிலும் ஹெல்த் பாஸ் கட்டாயம் என்பதை ஏற்க முடியாது என கோஷமிட்டனர்.
மேலும், போலீசாரின் அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையை மீறி ஒரு குழுவினர் பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மோதல்களின் போது பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மிலன், செசினா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம் என்று போராட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்.
அவரும் அவரது மனைவி மொரேனா இருவரும் செவிலியர்கள். தம்பதியினர் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பதாகவும், தங்கள் குடும்ப மருத்துவரால் தடுப்பூசி தேவையிலிருந்து விலக்கு பெற்றதாகவும் கூறுகின்றனர். இதனை உணராமல் ஹெல்த் பாஸ் கட்டாயம் என்று கூறி தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என குறிப்பிட்டார்.