பாரம்பரிய கட்சிகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் போது, தேர்தலில் புதிய கட்சி வெற்றி பெறுவது சுலபம் தான்.
அது தான் பஞ்சாபில் நடந்துள்ளது.பஞ்சாப் சட்டசபையின், மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி, அரசு அமைக்க உள்ளது. பஞ்சாப் முதல்வராக, காமெடி நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய, பகவந்த் மான் பொறுப்பேற்க உள்ளார். அவர் தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசை நடத்துவது அவருக்கு இமாலய பணியாக இருக்கும்.
காரணம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பகவந்த் மான் வரிசை கட்டி நிற்கும் சவால்களை சந்தித்தாக வேண்டும்.இதோ சவால்களின் பட்டியல்:’ரிமோட்’ அரசு’ஒரு மாநிலத்திற்கு உரிய முழு அதிகாரம் மறுக்கப்படுவதால் டில்லியை மேலும் முன்னேற்ற முடியவில்லை’ என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி புலம்புவார். தற்போது அவர் கட்சி பஞ்சாபில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் அங்கு பகவந்த் மான் சுதந்திரமாக செயல்பட கெஜ்ரிவால் அனுமதிக்க மாட்டார்.தன் மதிப்பை உயர்த்திக் காட்டும் திட்டங்களை அமல்படுத்த பகவந்திற்கு உத்தரவிடுவார். ‘ரிமோட்’ மூலம் பஞ்சாபை இயக்குவார்.
இது, டில்லி – பஞ்சாப் முதல்வர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும்.எங்கே நிதி? பஞ்சாப் அரசுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 56 சதவீதம். 2020 – 21ம் நிதியாண்டில் பஞ்சாப் வரி வருவாயில், 54 சதவீதம் கடனுக்கான வட்டியை செலுத்த செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில், கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர் வருவாய் குறைந்துள்ளது. இதனால், மூன்றாவது இடத்தில் இருந்த பஞ்சாப், 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.வாக்குறுதி நிறைவேறுமா? ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், குடிநீர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் தரப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மூத்த குடிமக்கள், விதவை, மாற்றுத் திறனாளி, அனாதைகள் ஆகியோருக்கான ஓய்வூதியத்தில், 2,500 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
பஞ்சாபில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், 1.10 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும் என்பது புரியாத புதிராக உள்ளது.வேளாண் பிரச்னைபஞ்சாப் வேளாண் துறை வளர்ச்சியில், 20 ஆண்டுகளாக தேக்கநிலை உள்ளது. 1986ல், ஆண்டுக்கு 5.07 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2015ல், 1.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, 21.94 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 71 ஆயிரத்து 305 கோடி ரூபாய் கடன் நிலுவை உள்ளது. இதை, முதல்வராகும் பகவந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் கேள்விக்குறி தான்.மாற்றுப் பயிர் கடந்த, 2019 – 20ல் 78.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில், 40 சதவீதம் நெல்; 45 சதவீதம் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உறுதி அளிக்காததால் காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை பயிரிட விவசாயிகளிடம் ஆர்வமில்லை.
அவர்களை, நெல், கோதுமையில் இருந்து அதிக வருவாய் தரும் மாற்றுப்பயிர் வேளாண்மையில் ஈடுபட ஊக்கமளிக்க வேண்டும்.குண்டர் ராஜ்ஜியம் பஞ்சாபில் அரசின் வரி வருவாய் குறைய குண்டர்களின் ராஜ்ஜியமும் ஒரு காரணம். மது வகைகளுக்கு அரசு விலை நிர்ணயித்தாலும், குண்டர்கள் வைக்கும் விலையில் தான் மது விற்கப்படுகிறது. மது வியாபாரிகள் கூட்டணி அமைத்து விலையை நிர்ணயிக்கின்றனர்.மணல் கொள்ளை பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இருந்தபோது, பல எம்.எல்.ஏ.,க்கள் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்தார். சட்லஜ் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக, கடந்த வாரம் மாநில சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்திருந்தது.
பகவந்த் மான் மணல் கொள்ளையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.போதைப் பழக்கம் பஞ்சாப், அண்டை நாடான பாக்.,கின் எல்லையோரம் இருப்பதால், மாநிலத்திற்கு போதை மருந்துகள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ‘ட்ரோன்’ எனப்படும் குட்டி விமானம் வாயிலாக சுலபமாக கடத்தி வரப்படுகிறது. பஞ்சாபில் தான் மிக அதிகமானோர் போதை மருந்திற்கு அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.தொழில் வளர்ச்சி ஒரு காலத்தில் தொழில் மையமாக இருந்த பஞ்சாப், பல ஆண்டுகளாக முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தொழில்களை அமைக்கின்றனர். சுலபமாக தொழில் செய்யும் மாநிலங்களில் பஞ்சாப், 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.வேலையில்லா திண்டாட்டம் கடந்த, 2019 – 20 நிலவரப்படி, வேலையில்லா திண்டாட்டம் தேசிய அளவில், 4.8 சதவீதமாக இருந்தது. ஆனால் பஞ்சாபில், 7.4 சதவீதமாக உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா காலத்திலும், படித்து முடித்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் வேலை தேடி வெளிநாடு சென்றுள்ளனர்.
இதே அளவிற்கு வெளிநாடு செல்வதற்கான விண்ணப்பங்களும் காத்துக் கிடக்கின்றன.இது போன்ற பல சவால்கள் பஞ்சாபில் அமையும் ஆம் ஆத்மி அரசுக்கு காத்திருக்கின்றன. காமெடி நடிப்பில் சவால் விட்டால் பகவந்த் மான் சுலபமாக ஜெயித்து விடுவார். ஆனால், அரசியல் சவால்களை அவர் சமாளிப்பாரா? முதல்வராகும் காமெடி நடிகர் ‘ஹீரோ’ ஆக மாறுவாரா? வரும் ஐந்தாண்டு கால முதல்வர் பதவி இதற்கான பதிலை தரும்.