இந்திய பெண்கள் அணி முதன் முறையாக பகலிரவு டெஸ்டில் பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் அணி, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-20’, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணை வெளியானது. இதன் படி மூன்று ஒருநாள் போட்டிகள் வடக்கு சிட்னியின் ஓவல் (செப். 19), ஜங்சன் ஓவல் (செப். 22, 24) மைதானங்களில் நடக்கவுள்ளன. அடுத்து, இந்திய பெண்கள் அணி வரலாற்றில் முதன் முறையாக பகலிரவு டெஸ்டில் பங்கேற்க உள்ளது. 2006க்குப் பின் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்கும் டெஸ்ட் இது. இப்போட்டி பெர்த்தில் செப். 30-அக் 3ல் நடக்கவுள்ளது. பிறகு ‘டுவென்டி-20’ போட்டிகள் வடக்கு சிட்னியில் அக்., 7, 9, 11ல் நடக்கவுள்ளன.
இந்திய பெண்கள் அணி 2014ல் இங்கிலாந்து (ஆக. 13-16), தென் ஆப்ரிக்கா (நவ. 16-19) அணிகளுக்கு எதிராக 2 டெஸ்டில் பங்கேற்றது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இந்திய பெண்கள் அணி ஒரே ஆண்டில் 2 டெஸ்டில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் அமித் ஷா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’பெண்கள் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். இந்திய பெண்கள் அணி வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்டில் விளையாட உள்ளது,’ என தெரிவித்திருந்தார்.