தமிழகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

47views

தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இன்றைய கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுனர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது, ஆளுநர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுனருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதேநேரம், இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!