‘நான்’ – மெழுகுவர்த்தி பேசுகிறேன் …..
உங்கள் எல்லாவற்றிலும்
நான் இருக்கிறேன்…
என்னை நீங்கள்
எப்போதும்
மறுதலிக்க முடியாது…
ஏசு பெருமானிடமும்
இருந்தேன்…
யூதாசிடமும்
இருந்தேன்…
காந்தியியின்
ஆஸ்ரமத்திலும்
அதேவேளை
கோட்சேக்களின் கூடாரங்களிலும்…
நீண்ட தாடி –
தொப்பிக்காரர்களிடமும்
எனக்குத் தோழமை உண்டு…
எனக்கு
நல்லவர் கெட்டவர்
பாகுபாடில்லை…
நானும்
கண்ணனின்
புல்லாங்குழல் போலத்தான்…
எடுப்பவர் கைகளில்
இழுத்தபடி வளைவேன்…
மிதவாதிகளிடமும்
மதவாதிகளிடமும்
எனக்கு நேசமுண்டு…
எவருக்காகவும்
எவரையும்
பகைக்கும் போக்கு
எனக்கில்லை ..
‘நான்’ இருப்பதாலேயே
இல்லாமலும் போகிறேன்…
விடுகதை அல்ல
எனக்கான
விளக்கமே அதுதான்…
உங்கள்
நல்ல காரியங்கள்
அனைத்துக்கும்
என்னையே துணையாக ஆக்குகிறீர்கள்…
நான்
மவுனமாய் நிற்கிறேன்…
என்னை
ஏற்றுகின்ற போதெல்லாம்
நீங்கள் இருட்டையே
இடற வைக்கிறீர்கள்….
அதில் கொஞ்சம்
மகிழ்ந்து போகிறேன்…
இயற்கையை இடறும்
ஒரு பொறி நான்…
இருட்டை உதறும்
சிறு துளி நான்…
எனினும் –
இருக்கும் வரை வாழ்ந்து
இல்லாமல் போகிறேன்
தியாகத்தின் பேரென்று
வரலாறாய் ஆகிறேன்…
உங்கள்
மகிழ்ச்சிகளிலும்
நெகிழ்ச்சிகளிலும்
நான் ஒரு
மவுன சாட்சி …
உங்கள்
கல்லறைகளிலும்
நான்
மங்கலமாய்ப் பேசுகிறேன்…
ஒளியை மட்டுமே
துணையாக்கி
இருளை நீக்குகிறேன்…
மலர்களைப் போலத்தான்
நானும்
உங்களுக்கு ஒரு மங்கலப்பொருள்…
பூவைப்போல் எடுத்து வைத்தும்
சமயங்களில்
பூவோடு எடுத்து வைத்தும்
போற்றுகிறீர்கள்….
எனைக் கொளுத்தி வைத்து
நான் உருகும்போது
வேண்டுகிறீர்கள்…
காலத்தின் ஏட்டில்
நானும் ஒரு கணிதம்…
உங்கள்
ஐந்தொகை வாழ்வில்
அடிக்கடி
உருகுவதால்
என் அங்கமெலாம்
புனிதம்…
உங்களுக்காகவே
வாழ்ந்து சாகிறேன் நிதம்….
ஆனாலும்
உங்களுக்கு மறதி அதிகம்…
நானொரு
சின்னச் சூரியன் …
என்னைக்கொண்டு
நீங்கள்
இருளை விரட்டுகிறீர்கள்…
நானொரு
சின்னப் பவுர்ணமி …
என்னைக் கொண்டு
நீங்கள்
அன்பை உணர்த்துகிறீர்கள்…
என்னை ஏற்றி வைத்து
நீங்கள்
ஆடை உரிகிறீர்கள் …
நான்
விழி மூடிக் கொள்கிறேன்….
என்னைக் கொண்டு
நீங்கள்
தவறுகளையும்
செய்கிறீர்கள்…
வெட்கித்து நோகிறேன்…
எங்கேயாவது
பற்ற வைத்தும் விடுகிறீர்கள்….
பதறிப் பதறி வேர்க்கிறேன்…
நான்
உங்களைத் தண்டிக்க முடியாமல்
தனியே அழுகிறேன்….
நான்
மவுனப் பேரொலி…
உங்கள் பேச்சுக்களை
உள்வாங்கியும்
பேச முடியாமல் மவுனிக்கிறேன்…. .
நான்
கண்ணீர்ப் பெருந்துளி…
உங்கள் குற்றங்களைக்
காட்டிக் கொடுக்க விரும்பாமல்
எனக்குள்ளேயே
கரைந்து போகிறேன்….
ஆனாலும்
உங்களில் இருந்து
நான்
வேறு பட்டவன்…
பல்வேறு வகைகளில்
மாறுபட்டவன்….
என் அழுகை
சத்தியமாகிறது …
இறைவன் முன்
சாட்சியும் ஆகிறது…
ஆனந்தம் ஆகிறது..
வாழ்வின் பொருள் சொல்லும்
அர்த்தமும் ஆகிறது…
உங்கள் செவிகள்
எவ்வளவு கூர்மையாய்
இருந்த போதிலும்
எனது பேச்சை
நீங்கள்
விளங்கிக் கொள்வதே இல்லை…
உங்கள்
நல்ல –
தீய –
அனைத்திற்கும்
நான் ஒரு முக்கிய ஆவணம்…
தலையில் பூத்துத்
தரையில் மடிகிறேன்…
இரவிலும் பகலிலும்
எப்போதும் சிரிக்கிறேன்…
அழுது கொண்டே சிரிப்பதும்
சிரித்துக் கொண்டே அழுவதும்
நீங்களல்ல-
நான்தான்….
உங்கள் இன்ப – துன்பம்
எல்லாவற்றையும்
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்…
உங்கள் எல்லாவற்றிலும்
‘நான்’ இருக்கிறேன்…
‘நான்’ இருப்பதாலேயே
இல்லாமலும் போகிறேன்…
இதுவும் உங்களுக்கு
நான் கற்றுத் தரும்
ஒரு பாடம்தான்….!
- அத்தாவுல்லா…