நாட்டின் வளர்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் தடுத்துள்ளது என காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் விவகாரம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கைக்கு பதிலளித்த மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பெகாசஸ் பிரச்சினை குறித்த கேள்வியை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் அதைத் தடுத்துள்ளனர். செஸ் விதித்தல், எரிபொருள் விலையை உயர்த்துவது, தேவையில்லாத திட்டங்களுக்கு பணத்தை வீணடிப்பதன் மூலம் அவர்கள் கோடிக் கணக்கான பணத்தை சம்பாதித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரம் கையிலெடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் முன்னேற்றத்தை தடம்புரளச் செய்வதுதான் அவர்களுக்கு எப்போதுமே விருப்பம்.
நாடாளுமன்றத்தில் முன்னேற்றுத்துக்கான எது வந்தாலும், அதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாது சீர்குலைக்க நினைப்பவர்கள் உலகளாவிய அமைப்புகள். இந்தியா முன்னேறிவிடக் கூடாது என தடங்கள் உண்டாக்குபவர்கள் நாட்டின் அரசியல்வாதிகள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை விமரிசித்தார்.