இந்தியாவின் நகர்ப்புற திட்டமிடலில் உள்ள இடைவெளிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், இல்லையென்றால் நாடு விரைவான வளர்ச்சி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.நிடி ஆயோக் அமைப்பு நேற்று ‘இந்திய நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கையை நிடி ஆயோக் மற்றும் மத்திய அமைச்சகங்கள் இணைந்து துறை சார் நிபுணர்களுடன் 9 மாதங்கள் விவாதித்து உருவாக்கியுள்ளது.2030-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு நகரமும் அனைவருக்குமான ஆரோக்கிய நகரமாக மாற வேண்டும், அடுத்த 5 ஆண்டுகளில் 500 ஆரோக்கிய நகரங்கள் திட்டம் போன்றவற்றை இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.
அந்நகரங்கள் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் கூட்டாக தேர்ந்தெடுக்கப்படும்.மேலும் அந்த அறிக்கையில், “உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகையில் 11% இந்தியாவில் உள்ளது. 2027-ம் ஆண்டில், இந்தியா சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும். திட்டமிடப்படாத நகரமயமாக்கல் நமது நகரங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கோவிட் தொற்றுநோய் நமது நகரங்களின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தீவிர தேவையை வெளிப்படுத்தியுள்ளது.” என கூறியுள்ளனர்.நிடி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், “வரவிருக்கும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நகர்ப்புற இந்தியா ஊக்கமளிக்கும். நகரத் திட்டமிடல் உட்பட பல்வேறு சவால்களுக்கு நம் நாட்டில் அதிக கொள்கை கவனம் தேவை. நகர்ப்புற திட்டமிடல் திறனில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது, இல்லையெனில் விரைவான, நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கான ஒரு பெரிய வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும்.” என அறிவுறுத்தியுள்ளார்.