”தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய வர்த்கம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி கிடைக்கவில்லை என, கடந்த முறை புகார் வந்தது. தற்போது, அது தொடர்பாக எந்த கருத்தும் வரவில்லை என்பது வரவேற்கத்தக்கது.
கடன்களுக்கான வட்டி குறைப்பு மற்றும் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை தொடர்பாக, அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறுவனங்களுக்கு எப்போது எது தேவையோ, அவை உடனடியாக செய்து தரப்படும்.கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை, தனியார் துறை ஆதரவுடன் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
தொழில் நிறுவனங்கள் சார்பில், ஏற்றுமதியில் உள்ள தடைகளை நீக்கவும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் அதிகரிப்பது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் இந்துஜா குழுமம், முருகப்பா, டி.வி.எஸ்., ராணே, அப்பல்லோ மருத்துவமனை உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.