தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ‘இன்லைன் ஆல்பைன்’ பிரிவில் கோவை மாணவர் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் 58-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சண்டிகர் மற்றும் மொகாலியில் நடைபெற்றது. இதில் ஸ்பீடு ஸ்கேட்டிங், இன்லைன் ஃப்ரீ ஸ்டைல், ஸ்கேட்போர்டிங், ரோலர் ஃப்ரீ ஸ்டைல், இன்லைன் டவுன்ஹில், இன்லைன் ஆல்பைன், ரோலர் டெர்பி, ரோலர் ஸ்கூட்டர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக அணியில், கோவை மாவட்டத்திலிருந்து 15 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இன்லைன் ஆல்பைன் பிரிவில் கோவை சாயிபாபா காலனியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஆரவ் ஜித் (11) தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
அவரைத் தவிர, இந்த போட்டியில் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்லைன் ஆல்பைன் பிரிவில் கோவையைச் சேர்ந்த எஸ்.கவுதமன் வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பி.நவீனா வெள்ளிப் பதக்கமும், பி.எஸ்.நிதி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதுகுறித்து தமிழக ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் பயிற்சியாளர் (இன்லைன் ஆல்பைன் பிரிவு) கனிஷ்கா தரணி குமார் கூறும்போது, ‘இன்லைன் ஆல்பைன் பிரிவில் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டோரில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் தமிழக வீரர் ஆரவ்ஜித் ஆவார். மாநில போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோர் தேசிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேசிய போட்டிகளில் சிறப்பாக செயல்படும் 3 வீரர்கள் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது ரோலர் ஸ்கேட்டிங் துறையில் சர்வதேச தரத்திலான மைதானங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றின் மூலமாக நல்ல தரமான வீரர்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.