தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் மணமக்கள் நவாஸ் ரெட்டி – பிரவல்லிகா ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் காரில் ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேர் காரில் இருந்தனர். வழியில் இந்த கார் வெள்ளத்தில் சிக்கியதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பிரவல்லிகா மட்டும் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது. இதுபோல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேரை காணவில்லை.
இந்நிலையில் தெலங்கானா அரசுப் பேருந்து ஒன்று, சுமார் 25 பயணிகளுடன் காமாரெட்டியிலிருந்து சித்திப்பேட்டைக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது ராஜண்ண சிரிசில்லா மாவட்டம், லிங்கண்ண பேட்டா பகுதியில் உள்ள தரைப் பாலத்தை பேருந்து கடக்கும்போது, நடுவழியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி, பத்திரமாக அக்கரைக்கு வந்து சேர்ந்தனர். பிறகு டிரைவர் மட்டும் பேருந்தை அக்கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் வெள்ளம் அதிகரித்ததால் அவரும் கீழே குதித்து உயிர் தப்பினார். பிறகு பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.