‘தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில், ஆக., – செப்., மாதங்களில் தென்மேற்கு பருவ மழை, வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும்’ என்ற மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் தாமதமாக, ஜூன் 3ல் கேரளாவில் துவங்கியது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி தவிர, வட மாநிலங்களின் சில பகுதிகளிலும், கிழக்கு, மேற்கு, தென் மாநிலங்களிலும் ஜூன் 19 முதல் மழை பொழியத் துவங்கியது.
அதன் பின் தற்காலிகமாக ஓய்ந்த தென்மேற்கு பருவ மழை, ஜூலை 8 முதல் மீண்டும் துவங்கியது. டில்லி உட்பட நாட்டின் அனைத்து பகுதி யிலும், 16 நாட்கள் தாமதமாக ஜூலை 13ல் பருவ மழை பொழிந்தது.ஜூன் – ஜூலை மாதங்களுக்கான தென்மேற்கு மழை முடிந்துவிட்ட நிலையில், ஆக., – செப்., மாதங்களுக்கான இரண்டாம் பாதி மழை பொழிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மொஹாபத்ரா நேற்று கூறியதாவது:மேற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர், லடாக், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த மாதம் வழக்கத்தை விட சற்று குறைவான மழை பொழிவே இருக்கும்.தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகள், கோவா, மத்திய மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், பீஹார் ஆகிய பகுதிகளில் இந்த மாதம் வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே மழை பொழிவு இருக்கும்.
இந்த ஆண்டு ஆக., – செப்., மாதங்களில் நாடு முழுதுமான மழை பொழிவு, சராசரி அளவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.கடந்த 1961 – 2010 வரையில் ஆக., – செப்., மாதங்களுக்கான பருவ மழையின் நீண்ட கால சராசரி அளவு, 42.82 செ.மீ., ஆக உள்ளது.சராசரிவடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் இந்த மாதமும், அடுத்த மாதமும் மிக சராசரியான மழையே இருக்கும். தென் மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகள், மத்திய மாநிலங்களின் பகுதிகளில், சராசரிக்கும் சற்று அதிகமான மழை பொழிவு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.