நிகழ்வு

துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

192views
தைப்பொங்கல் அன்று துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் கான்சுல் திரு. காளிமுத்து (Economic, Trade & Commerce இந்திய துணை தூதரகம், துபாய்) அவர்கள் தலைமையில் பத்மஸ்ரீ திரு.சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்களின் புதல்வி கலைமாமணி திருமதி. பாரதி திருமகன் அவர்களின் வில்லுப்பாட்டு “பொங்கலோ பொங்கல்” நிகழ்ச்சி துபாய் தமிழ் பெண்கள் சங்கம் சார்பாக இனிதே நடந்தது. பாரதி திருமகன் தம் கைபிடித்து திருவள்ளுவர் வாசுகி தம்பதியர் பொங்கலோ பொங்கல் குறித்து தமக்குச் சொல்வது போல் போகி, பொங்கல், ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் என அத்தனையையும் கதையாகவும், பாட்டாகவும் நாடகப் பாங்கில் வில்லிசையில் சொல்லி விவசாயம், விவசாயி குறித்து நமக்கு சிந்திப்பதற்கும் சில செய்திகளை வைத்தார். வில்லின் சொல்லோடு கூட குடம் தந்த ஆமோதிப்பும், இரவின் இதமான குளிரோடு இனிய இசையும், மற்றும் தபேலாவின் தாளமும், கீபோர்டு தந்த கலவை ஒலிகளும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. பிற மொழி மக்களும் வில்லினைப் பார்த்து புதுமையாக இருக்கிறதே என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்தோடு பார்த்து இரசித்தனர்.

கான்சுல் திரு காளிமுத்து அவர்கள் இறுதி வரை இருந்து கடந்த ஒரு மணி நேரம் எங்களையெல்லாம் கிராமத்திற்கே அழைத்துச் சென்ற உணர்வினைத் தந்து விட்டீர்கள் என்று கூறி அவர்களைப் பெருமை படுத்தினார்.

நமது நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டினை EXPO 2020 க்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமை நம் அனைவரையும் சேரும். நமது பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகளை இன்னும் பிற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவரின் மனதிலும் இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகவும், பேராசையாகவும் உள்ளது. தமிழ் பெண்கள் சங்கம் அடுத்ததொரு அருமையான நிகழ்ச்சி தந்ததில் பெருமை கொள்கிறது.
நிகழ்ச்சியில் வெளி நாட்டு வாழ் தமிழ் இந்தியர்களின் அமீரகத்திற்கான பொறுப்பாளராக இருக்கும் திரு. சித்திக் சையத் மீரான் அவர்களும், பெருமாள் பூக்கடை உரிமையாளர் திரு.பெருமாள் அவர்களும் துபாய் தமிழ் சங்கத்தின் புரவலரும் தொழிலதிபருமான திரு சோனா இராம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்க நிர்வாகிகள் மீனாகுமாரி பத்மநாதன், சிவசக்தி இராமநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!