திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் 299 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 177 திருமண மண்டபங்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளன. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண மண்டபங்கள் கட்டினாலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், இதுகுறித்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இவர்கள் கொடுத்த அறிக்கை தேவஸ்தான அதிகாரிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில திருமண மண்டபங்களில் அவ்வூர் மக்கள் மாடுகளை கட்டி அவைகளை மாட்டுக் கொட்டகைகளாக மாற்றி விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள 177 தேவஸ்தான திருமண மண்டபங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், இதற்கு முந்தைய அறங்காவலரான புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், இனி திருமண மண்டபங்களே கட்டக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.