தமிழகம்

திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு !!

38views

திமுகவின் 8 மாத கால ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்பபடுத்தியுள்னர். அந்த வகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 182 வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நன்கொடையாக, நிர்வாகி ஒருவர் 1 லட்சம் ரூபாயையும், கொளத்தூரை சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1000 ரூபாயையும் கமல்ஹாசனிடம் அளித்தனர்.

வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கமல்ஹாசன், நாட்டில் ஏழ்மையை தீர்க்க வேண்டும் என்றால், அதற்கு பெண்கள் பகுதிநேரமாவது அரசியலுக்கு வரவேண்டும். அப்படி அவர்கள் வந்தாலே, நாடு முழு நேரம் நல்லபடியாக மாறிவிடும். இன்றைய சூழலில் முழு நேர அரசியல்வாதி தேவையில்லை, ஏனென்றால் அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது.

தேர்தலில் போட்டியிடுபவர்களை மிரட்டும் ரௌடிகள் கூட்டம் பெரிது தான். ஆனால் அது வெறும் கூட்டம் மட்டுமே. அதற்கு முன் நமது கட்சி, ஒரு சங்கமம். ஒரு ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு ஊரை கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஊரையை அடித்து உலையில் போடும் மனநிலையை மாற்ற வேண்டும்.

கொஞ்சம் நேர்மையை கடைபிடித்தால் போதும், இங்கு நிலைமை மாறிவிடும். நேர்மையை கடைப்பிடிப்பதென்பது, கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். அதை பின்பற்றி ஆட்சியை மாற்றுவோம். ஆனால் அதேநேரம், ஆட்சியை மாற்றுவோம் என்று சொன்னால் மட்டும் போதாது. காட்சிகளையும் மாற்ற வேண்டும். முதலில் குடுமியை பிடிப்போம், பின்னர் ஆட்சியை பிடிப்போம், என்றார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், செய்யக் கூடிய விஷயங்களை செய்து காட்டும் வாய்ப்பாக இந்த தேர்தலை பார்க்கிறேன். மக்கள், சேவை பற்றியும் நேர்மையை பற்றியும் செய்யக்கூடிய விஷயத்தை செய்து காட்டும் வாய்ப்பாக இருக்கும். திமுகவின் 8 மாத ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற ராகுல் காந்தியின் கருத்து’ குறித்த கேள்விக்கு, தமிழகத்தை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பதுதான் எனது கருத்து, என்றார்.

நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஏஜெண்டாக செயல்பட கூடாது. மத்திய அரசு சொல்வதைதான் ஆளுநர் செய்கிறார், எனவும் கமல்ஹாசன் கூறுகிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!