விளையாட்டு

தினேஷ் கார்த்திக் சரவெடி – ஆர்சிபிக்கு 2வது வெற்றி! ராஜஸ்தான் போராடி வீழ்ந்தது!

39views

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்குச் சென்ற ஆர்சிபி 2வது வெற்றியை ருசித்தது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூபிளெசிஸ், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இந்த முறையும் திணறியபடியே விளையாடிய ஜெய்ஸ்வால் 4 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய படிக்கல், பட்லருடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்ட, ரன் ரேட் சீராக உயர்ந்து வந்தது. ஹர்சல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து திடீரென வெளியேறினார் படிக்கல். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கெட்டினார்.

அடுத்து வந்த ஹெட்மயர் பட்லருடன் கைகோர்த்து அதிரடியாக விளையாடத் துவங்கினார். டெத் ஓவர்களில் இந்த கூட்டணி சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பவுலர்களிடம் வான வேடிக்கை காட்டியது. ஒரு கட்டத்தில் 150 ரன்கள் கூட வராது போல என பலரும் நினைத்த நிலையில், அதிரடியாக விளையாடி ஸ்கோரை 169 ரன்களுக்கு உயர்த்தினர் பட்லரும் ஹெட்மயரும். இறுதியாக பட்லர் 70 ரன்களுடனும், ஹெட்மயர் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பனியின் தாக்கம் காரணமாக சேஸிங்கில் எளிதான இலக்கு என பலரும் நினைக்க ஆர்சிபி தன் பழைய பார்முக்கு ஒருமுறை சென்று திரும்பி அதிர்ச்சி அளித்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய டுபிளசிஸ், அனுஜ் ராவத் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 7 ஓவர் முடிவில் 55 ரன்களை சேர்த்த நிலையில் இந்த கூட்டணி உடைந்தது. சாஹல் பந்துவீச்சில் டுபிளசிஸ் அவுட்டாக, சைனி பந்துவீச்சில் அனுஜ் ராவத் அவுட்டாகி நடையை கட்டினார். அவ்வளவு தான்! அடுத்து வந்தவர்கள் பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த துவங்க, ஆர்சிபி நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியது.

கோலி, டேவிட் வில்லே, ரூதர்போர்ட் என மூன்று பேர் களத்திற்கு ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஆட்டமிழக்காமல் 55 ரன்களை குவித்த அதே ஆர்சிபி, 87 ரன்களை எட்டும்போது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஷபாஷ் அகமது ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ட்ரெண்ட் போல்ட், சைனி என அனைத்து நட்சத்திர பவுலர்களின் பந்துவீச்சையும் சிக்ஸர், பவுண்டரிகளாக மாற்றியது இந்த கூட்டணி. 12 ரன்களுக்கு மேல் தேவைப்படும் ரன் ரேட் எகிறிச் சென்ற நிலையில் அதை ஆறு ரன்களுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தி அசத்தினர். 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் ஷபாஷ் அகமது போல்ச்ட் பந்துவீச்சில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஹர்ஷல் படேல் தன் பங்குக்கு சிக்ஸர் விளாச ராஜஸ்தானின் தோல்வி உறுதியானது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி தினேஷ் கார்த்திக் அணியை வெற்றியை எட்ட துணை நின்றார். தோல்வியின் விளிம்புக்கு சென்ற அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது ஆர்சிபி அணிக்கு இந்த சீசனில் 2வது வெற்றியாகும். தொடர் வெற்றிகளை குவித்த ராஜஸ்தான் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்துவிட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!