தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாங்காக் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. இதனால் நகர்களுக்கிடையேயான போக்குவரத்தும் மின்சார வசதியும் தடைபட்டுள்ளன.
தொடர் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இதுவரை 1997795 குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
வடக்குப் பகுதியில் உள்ள சாவோ ப்ரயா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அணைகள் நிறைந்ததால் லோப்புரி, சரபுரி, அயுதயா, பதும்தனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.